செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு ”தமிழ்த்தாய் விருது”

தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு.கோச்சடை இரா.குருசாமி அவர்கள்

 தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் 
வழங்கும் “தமிழ்த்தாய் விருது
தமிழ்த் தொண்டிற்கு ஓர் அங்கீகாரம்
  தமிழக அரசு தமிழுக்கு நற்தொண்டாற்றிய ஓர் அமைப்பிற்குத் தமிழ்த்தாய் விருது வழங்கவும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டு இருந்தார். இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெறும் மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கு விருதுத் தொகையாக ஐந்து இலட்சம் ரூபாயும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ்ப்புத்தாண்டு  விழாவில் 13-04-2012 அன்று வழங்கப் பட இருக்கிறது. இவ்விருதினைத் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் வழங்குகிறார்கள்.

”தமிழ்த்தாய்” விருது பெறும்
 மதுரைத் தமிழ்ச் சங்கம்
 தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்பையும் தமிழ்கூறும் நல்லுலகில் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், எல்லார்க்கும் தமிழின் மேன்மையை அடையச் செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடனும் வள்ளல். பொன்.பாண்டித்துரைத்தேவர் அவர்கள் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை 1901-இல் நிறுவினார்கள்.

திருவள்ளுவராண்டு 2042 கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்து நிறுவனர், சிவநெறிச்செல்வர், பாலவநத்தத்துப் பேராண்ட மாமன்னர், வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவரவர்களின் நூற்றாண்டு நினைவுப் பெருவிழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம், தருமை ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம் ஆகிய ஆதீனங்களைச் சார்ந்த குருமகா சன்னிதானங்கள் கலந்து கொண்டு தமிழுக்கெனவே செயல்படும் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் மற்றும் செந்தமிழ்க் கல்லூரியின் சேவைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள்

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத் தலைவர் மாட்சிமை தங்கிய மன்னர் நா.குமரன்சேதுபதி அவர்கள், மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள், செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு.கோச்சடை இரா.குருசாமி அவர்கள், செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா அவர்கள், மதுரைத் தமிழ்ச்சங்க ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் திரு.க.முத்தையாபசும்பொன் அவர்கள், திரு சு. வீரணசாமி அவர்கள் ஆகியோர்களால் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்து நிறுவனர்க்குப் பெருமை சேர்க்கும் வகையில் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட்டது. இத்தகைய பெருமைக்குரிய ஆண்டில் ”தமிழ்த்தாய் விருது” கிடைத்திருப்பது சிறப்புக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.   
செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு.கோச்சடை இரா.குருசாமி அவர்கள்
தரணி போற்றும் மாமதுரையில் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி ஒன்றை மட்டுமே தங்கள் நிறுவனத்தின் குறிக்கோளாகக் கொண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் மற்றும் அதன் ஓர் அங்கமாகச் செந்தமிழ்க்கல்லூரியும் செயல்பட்டுத் தொடர்ந்து தமிழ்ச் சேவைகள் புரிந்து வருகின்றன.

 செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாது பிற பல்கலைக்கழகம், மற்றும் பிற கல்லூரி மாணவர்களின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் சேவை நோக்கில் செந்தமிழ்க் கல்லூரியில் உள்ள பாண்டியன் நூலகத்தில்  33200 நூல்களும் 35 இதழ்களும் மதுரைத் தமிழ்ச்சங்க நூலகத்தில் 14033 நூல்களும் பெரிதும் பயனுடையதாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர 1135 முனைவர் மற்றும் எம்ஃபில் பட்ட ஆய்வேடுகளும், 260 அரிய ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 அறக்கட்டளைகளை நிறுவியும், அரிய நூல்களைப் பதிப்பித்தும், தமிழாய்வுகளைத் முதல் தர நிலையில் பேணிப் பாதுகாத்தும் வரும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பங்கும் பணியும் இத்தருணத்தில் மேலும் சிறப்புக்குரியன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக