சிறப்புக் கட்டுரை
வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவரவர்களின் நூற்றாண்டு நினைவு நாள் விழா
முனைவர் மு.மீனா
முதல்வர்(பொ.)
முதல்வர்(பொ.)
செந்தமிழ்க் கல்லூரி
. .. .. .. ..
'பால்கெழு சிறப்பின் பல்லியம் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற
ஓதையும்
மாதவர் ஓதி மலிந்த
ஓதையும்
மீளா வென்றி வேந்தன்
சிறப்பொடு
வாளோர் எடுத்த நாலணி
முழவமும்
போரில் கொண்ட பொருகரி
முழக்கமும்
வாரிக் கொண்ட வயக்கரி
முழக்கமும்
பணைநிலைப் புரவி ஆலும்
ஓதையும்
கிணைநிலைப் பொருநர்
வைகரைப் பாணியும்
கார்க்கடல் ஒலியில்
கலிகெழு கூடல்
ஆர்ப்பொலி' இனிதோங்கி விளங்கிய இளங்கோவடிகள் காட்டிய
நான்மாடக்கூடல் மதுரை காட்சி, நீண்ட நெடுநாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 2, 2011ஆம் நாளன்றும்
கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தது.
வள்ளல் பொன்.
பாண்டித்துரைத் தேவர்
திருவள்ளுவராண்டு 2042 கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று,
மதுரை நான்காம்
தமிழ்ச்சங்கத்து நிறுவனர், சிவநெறிச்செல்வர், பாலவநத்தத்துப் பேராண்ட மாமன்னர், வள்ளல் பொன்.
பாண்டித்துரைத் தேவரவர்களின் நூற்றாண்டு நினைவுப் பெருவிழா தான்
மேற்காட்டிய வண்ணம் நிகழ்ந்தது.
மதுரைத் தமிழ்ச்சங்கம்- செந்தமிழ்க்கலாசாலை- (செந்தமிழ்க் கல்லூரி)-1901 |
நூற்றாண்டு நினைவுப் பெருவிழா நிகழ்ச்சியானது, மாட்சிமைதங்கிய மன்னர் நா.குமரன் சேதுபதி அவர்கள் தலைமையில்
மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆற்றல் மிகு செயலாளர் திருமிகு
இரா.அழகுமலை எம்.ஏ.எம்ஃபில்., அவர்கள் மற்றும் செந்தமிழ்க் கல்லூரியின் சிறப்புமிகு
செயலாளர் திருமிகு இரா.குருசாமி பி.ஏ. அவர்களின் முன்னிலையில்
தொடக்கம் பெற்று, தமிழறிஞர்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
ஒருவர் வாழ்ந்து
கொண்டிருக்கும் நாளில் பிறரிடமிருந்து
பெறும் பாராட்டுதலும், பரிசும், விருதும் அளவுகோலாகக் கொண்டு எந்தவொரு தலைசிறந்த மாமனிதரின் பீடும் பெருமையும்
கணக்கிடப்பட இயலாது. அவர் பூவுலகை விட்டு
நீங்கிய பின்றை, மற்றவரால் அவரின் நினைவு போற்றப்படுகின்ற விதமே அவரின் தலைசான்ற
பண்பை வெளிக்காட்டும். அவ்வகையில்,
வள்ளல் பொன்.
பாண்டித்துரைத் தேவர் அவர்களின் மேன்மை நூற்றாண்டு நினைவுப் பெருவிழாவில் அனைவரும்
உயத்துணரும் வண்ணம் அமைந்தது.
மதுரைத் தமிழ்ச்சங்கம்-1901- செந்தமிழ்க் கல்லூரி-1957 |
02.12.2011 அன்று வைகறைப் பொழுது
மன்னரின் நினைவுகளோடு விடிந்தது. காலை 9 மணிக்கு, மதுரைத் தமிழ்ச்சங்கத்தில்
குழுமியிருந்தோர் வள்ளல் அவர்களின் பெருமைகளை எண்ணி வியந்து கொண்டே, பெருமகனாரின்
திருவுருவச்சிலைக்கு மரியாதை செய்ய ஆயத்தமாகினர்.
மலர்க்கிரீடம் மற்றும் மலர் வளையங்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளலின்
திருவுருவச்சிலை அமைவிடம் நோக்கி,
மாட்சிமைதங்கிய மாமன்னர் நா.குமரன்சேதுபதி அவர்கள்,
ஆற்றல்
மிகு தமிழ்ச்சங்கச் செயலாளர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள்,
பெருமைமிகு செந்தமிழ்க்
கல்லூரிச் செயலாளர்
திருமிகு
இரா.குருசாமி அவர்கள், ,
மதுரைத்
தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திருமிகு சு.வீரணசாமி, அவர்கள், திருமிகு
க.முத்தையாபசும்பொன் அவர்கள் ஆகியோர் அணிவகுத்துச் செல்ல,
செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர்
வழிகாட்டுதலோடு, செந்தமிழ்க் கல்லூரி முதல்வர்(பொ.) உள்ளிட்ட பேராசிரியர்களும், செந்தமிழ்க் கல்லூரி
கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களும், மாணவ, மாணவியரும் ஒருங்கு திரண்டு அணிஊர்வலமாகத் தமிழ்ச்சங்கச்
சாலையில் சென்ற காட்சி ஒப்பற்ற தலைவரின் தமிழ்ப்புகழ் தெருவெல்லாம் பரவும் வகையில்
அமைந்தது.
'பகை தெறல் அறியாப் பயன்கெழு
வீதியாக' தமிழ்ப்பயன்
கெழு வீதியாகத் தமிழ்ச்சங்கச் சாலை அன்று காட்சியளித்தது.
தலைமைப் பண்பாளர்கள்
மாலையணிவித்து மகிழ கூடியிருந்தோர் அனைவரும் மனங்குளிர்ந்து நினைவஞ்சலி
செலுத்தினார்கள். மதுரை மாநகரப்
பெருமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள். மீண்டும் ஊர்வலமாகத் திரும்பி, வள்ளல் பொன்.
பாண்டித்துரைத் தேவரவர்களின் அருள் வளாகமான மதுரைத் தமிழ்ச்சங்க வளாகத்தைச்
சென்றடைந்த பொழுதே, விழாவில் பங்கேற்கத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தமிழ்
ஆர்வலர்களும், தமிழ்ச் சான்றோர்களும் ஒருங்குகூடத் தொடங்கினர்.
வள்ளல் பொன்.
பாண்டித்துரைத் தேவரவர்கள் சிவநெறிச் செல்வராகத் திகழ்ந்தமையாலும் சைவமடங்களைத்
தன்வாழ்நாளில் ஆதரித்து வந்தமையாலும் பெருவிழாவில் திருவாவடுதுறை, தருமை, மதுரை, கயிலை, காமாட்சிபுரி ஆதீனங்களைச் சார்ந்த குருமகா
சன்னிதானங்கள் அனைவரும் பங்கேற்று அருளாசி வழங்கத் தங்களின் கனிவான ஒப்புதலை நல்கினர்.
நூற்றாண்டுப்
பெருவிழாவிற்கு முதன் முதலாக வருகைபுரிந்த திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை
ஆதீனம் 23வது குருமகாசன்னிதானம்
சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களும், மதுரை ஆதீனம் 292வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ
அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களும், காமாட்சிபுரி ஆதீனம்
அங்காளபரமேஸ்வரி சித்தர்பீடம் மகா சமஸ்தானம் ஸ்ரீலஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்
அவர்களும், பாண்டியன் நூலகத்தில் வணங்கிப் பூசித்து வரப்படுகின்ற வள்ளல் பொன்.
பாண்டித்துரைத் தேவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு முதலில் அஞ்சலி
செலுத்தினார்கள்.பின்னர் மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலாளர், செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர்
மற்றும் வருகை புரிந்த அனைவருக்கும்
அருளாசி வழங்கினார்கள்.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் என்று பெருமிதத்துடன் அழைக்கப்படும் மதுரைத்
தமிழ்ச்சங்கத்தில் வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர் அருள் வளாகம் என்றழைக்கப்படும்
கட்டிடப்பணி நடந்து கொண்டிருக்கக்கூடிய கலையரங்கம் வண்ணமிகு பட்டாடையுடனும்
சரசரக்கும் பொன்னிற அசைந்தாடிகளுடனும்; அழகு சிகப்பு கம்பளங்கள் விரிக்கப்பட்டும் மின்
விளக்குகளால் ஒளியூட்டப்பட்டும் மிளிர்ந்தது. வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர்
அவர்களின் நினைவுப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் பொலிவுடன்
அமைக்கப்பட்ட இவ்விழா அரங்கில் நிகழ்த்தப் பெற்றன
மதுரைத்
தமிழ்ச்சங்கத்தின் பாண்டியன் நூலக வளாகத்தில் வீற்றிருந்த குருமகா சன்னிதானங்கள்
அனைவரும் விழாவிற்கு வருகை புரிந்த மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு
உறுப்பினர்கள், செந்தமிழ்க் கல்லூரி கல்விக்குழு உறுப்பினர்கள், செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியர் -
அலுவலர் - மாணவர்கள், சிவநெறியைப் பின்பற்றும் சிவநெறிச் சிந்தனையாளர்கள், தமிழுணர்வுமிக்க தமிழ் ஆர்வலர்கள்
வள்ளல் மீது பற்றுகொண்ட அன்பர்கள், ஊர்ப்பெருமக்கள் , சான்றோர்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அன்பர்கள்
அனைவருக்கும் அருளாசி வழங்கிய பின்னர், மிகச்சரியாக முற்பகல் 10 மணிக்கு நினைவுப் பெருவிழா தொடங்கியது.
அலங்கார மேடையில்
திருவாவடுதுறை ஆதீனம், தருமை ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம் ஆகிய ஆதீனங்களைச் சாhந்த குருமகா
சன்னிதானங்கள் வீற்றிருந்தனர். அவர்களுடன்
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத் தலைவர் மாட்சிமை தங்கிய மன்னர் நா.குமரன்சேதுபதி
அவர்கள், மதுரைத்
தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள், செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர்
திருமிகு இரா.குருசாமி அவர்கள், செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா
அவர்கள், மதுரைத்
தமிழ்ச்சங்க ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் திரு.க.முத்தையாபசும்பொன் அவர்கள்,
திரு சு. வீரணசாமி
அவர்கள் ஆகியோர் வீற்றிருந்தனர்.
இக்காட்சியானது பூலோகக் கயிலாயமாகக் காட்சியளித்தது. சிவ, சிவ என்றொலிக்கின்ற மந்திரஒலியை அனைவரும்
கேட்டிருக்கலாம். ஆனால் சிவ என்னும்
மந்திரவொலி காட்சியளித்தால் எங்ஙனம் திகழுமோ, அங்ஙனம் விழாமேடை திகழ்ந்தது.
பெருவிழா இறையிசையோடு
தொடங்கியது. மதுரை ஆதீனத்துப் பெரும்
புலவர் திரு.குருசாமி தேசிகரின் பெயரன் தேவாரப் பாடலை இசைத்தார். வருகைபுரிந்த அனைத்துப் பெருமக்களையும்
செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா அவர்கள் இன்முகத்துடன்
வரவேற்றார். மாட்சிமை தங்கிய முகவை மன்னர்,
மதுரைத்
தமிழ்ச்சங்கத் தலைவர் நா.குமரன் சேதுபதி அவர்கள் பெருவிழாவைத் தலைமையேற்று,
தம் தலைமையுரையை
மிகச்சிறப்புடன் வழங்கினார். முன்னிலை
வகித்து, விழாவைச்
சிறப்பித்த மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலாளர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் வள்ளலின்
தமிழ்ப்பற்றையும் தேசியம் மற்றும் சைவநெறி ஆழத்தையும் நினைவு கூர்ந்தார். முன்னிலை வகித்த செந்தமிழ்க் கல்லூரிச்
செயலாளர் திருமிகு இரா.குருசாமி அவர்கள் வள்ளல் பெருமகனார் தமிழ்ச்சங்கத்தைத்
தோற்றுவித்த சூழலின் அருமையையும் பெருமையையும் சுட்டிக்காட்டி வள்ளல் அவர்களின்
தொலைதூரச் சிந்தனையின் மேன்மையை வெளிப்படுத்தினார்;.
அருளாசியுரையைத் துவக்கிய
மதுரை ஆதீனம் 292வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ
அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தமிழ்மொழி சீரும்
சிறப்பும் பெறுவதற்கு வள்ளல் அவர்கள் முயன்றமையையும், சைவமடங்களின் தோற்றத்திற்கும்,
வளர்ச்சிக்கும்
பாலவநத்தம் ஜமீன் அவர்கள் தமிழுணர்வுடன் செயலாற்றியதைப் போற்றியுரைத்தார். சேதுபதி பரம்பரையினர் சைவத் தொண்டையும் அருட்கொடையையும்
சிறப்புற வழங்கியமையைக் குறிப்பி;ட்ட மதுரை ஆதீனம் 292வது குருமகாசன்னிதாம் அவர்கள்
வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர் கலையரங்கம் கட்டிடப்பணி நிறைவுபெற வேண்டும் என்று
வாழ்த்தியருளினார்கள். அதற்காகத் தாம்
உரூபா ஒரு இலட்சம் தருவதாக உறுதியளித்தார்கள்.
தம் அறிக்கையைத் தொடர்ந்து, பிறகும் நன்கொடை வழங்குவார்கள் என்றும், கட்டிடம் சிறப்புற
மேன்மையாகவும் பொலிவுடனும் பூர்த்தியடையும் என்றும் அருளுரையில் வாழ்த்தினார்கள்.
திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 23வது குருமகாசன்னிதானம்
சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தம் அருளாசியுரையில் வள்ளல்
பொன்.பாண்டித்துரைத்தேவர் அவர்களுக்கும் சைவ சமய மடங்கள் அனைத்திற்கும் உரிய
தொடர்பினைச் சிறப்பித்து வாழ்த்தினார்கள்.
வள்ளல் அவர்களும் அவர்தம் சகோதரர் பாஸ்கரசேதுபதி அவர்களும் ஆன்மிகத்தை உலக
அளவில் பரப்பிய விவேகானந்தருக்குத் துணை நின்றமையை வியந்து பாராட்டினார்கள். தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கியப் பதிப்பிற்கும்,
தமிழாய்வுக்
களத்திற்கும் வள்ளல் அவர்கள் அடிக்கல் நாட்டியதையும் சிறப்புற கோபுரமாய் மொழியைப்
பெருமையடையச் செய்தமையையும் அனைவருக்கும் வலியுறுத்தி உரைத்தார்கள். மதுரை ஆதீனம் அவர்கள் வள்ளல். பொன்.
பாண்டித்துரைத் தேவர் கலையரங்கம் பூர்த்தியடைவதற்கு நன்கொடை அறிவித்தமையைத்
தொடர்ந்து, தாமும் ஓரு இலட்சம் உரூபா வழங்குவதாகவும், அதற்குத் தொடக்கமாக விழா
அரங்கிலேயே உரூபா பத்தாயிரம் அளிப்பதாகவும் உரைத்து முன்தொகை வழங்கினார்கள். மேலும், தமிழ்மொழியைக் கற்று, கல்லூரியளவில் முதல்
மதிப்பெண் பெறும் மாணவர் ஒருவருக்கு ஆண்டு தோறும் உரூபா 5000 வழங்குவதாகவும் மற்றும் ஏழை
மாணவர் இருவருக்கு ஆண்டுதோறும் கல்வித் தொகை வழங்குவதாகவும் அறிவிப்பு
நல்கினார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தின்
மதுரைக்கிளையினரை உடனடியாக அவர் அறிவிப்பைச் செயல்படுத்துமாறு
அறிவுறுத்தியுள்ளார்கள். சைவநெறி
பரப்பிவரும் குருமகாசன்னிதானம் அவர்கள் தமிழ்மொழியையும், தமிழ்மொழி பயிலும் மாணவ, மாணவியரையும் ஊக்குவித்து
தம் அருளாசியை வழங்கினார்கள்.
தொடர்ந்து அருளாசி
வழங்கிய தருமை ஆதீனம் 26வது
குருமகாசன்னிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய
சுவாமிகள் அவர்கள் வள்ளல் பரம்பரையினரின் தெய்வத்தொண்டையும், சைவத் தொண்டையும்
சிறப்பித்து உரைத்தார்கள். தருமை
ஆதீனத்திற்கும் சேதுபதி அரசக்குடும்பத்தினருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும்,
தொல்காப்பியம்
முதலாக மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற காப்பியங்களும் வாழ்க்கை நெறிகளை உரைக்கும் திருக்குறள்
போன்ற அறநூல்களையும் பதிப்பித்து தமிழ்மொழிக்கு உயிரூட்டியமையைப் போற்றிப்
புகழ்ந்துரைத்தார்கள்.
திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் அதிபர் கயிலை மாமுனிவர்
ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் அருளாசி
வழங்கும்போது, வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர் அவர்கள் அவதரித்த 1867இலிருந்து; மறைந்த 1911 வரை தமிழகத்தில் வாழ்ந்த
புலவர்கள், அறிஞர்கள், பதிப்பாசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஆகிய அனைவரும் வள்ளல் அவர்களால்
ஆதரிக்கப்பட்டார்கள் என்ற கருத்தை மொழிந்தார்.
மேலும் பழம்பெரும்
பாண்டிய மன்னர்களின் வீரம், விவேகம், தமிழ்க்காதல், பக்தி முதலிய அனைத்துப் பெருமிதப் பண்புகளும் செறிந்த
தமிழ்ப்புரவலர், தமிழ்ப்புலவர் வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர் அவர்களாவர் என்று புகழாரம்
சூட்டியதோடு மட்டுமல்லாமல் வள்ளலின் முன்னோர்களாகிய சேதுமன்னர்கள், ஸ்ரீகாசிமடம் தொடங்கியது
முதலாக இம்மடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு அறங்கள் பல ஆற்றியமையை நினைவு
கூர்ந்து, சேதுமன்னர்கள்
ஆற்றிய செந்தமிழ்ப் பணியைத் தொடரும் அனைவரும் சிறந்து வாழ்வாங்கு வாழ்க என்று
வாழ்த்தி உரை வழங்கியருளினார்.
அருளாசியின் நிறைவுரையாக
அருள் வழங்கிய காமாட்சிபுரி ஆதீனம் அவர்கள் வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர்
அவர்கள் சைவநெறியைத் தழைத்தோங்கச் செய்தமையைச் சுட்டிக்காட்டினார். மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு ஆட்சிபுரிந்த
சேதுபதி மன்னர்களும் அவர்கள் தம் கல்வி நிறுவனங்களும் சைவசமயத்தையும், சைவமடத்தையும்
வளர்த்தாகவும், இன்று கல்வி நிறுவனங்களுக்குச் சைவமடங்கள் உறுதுணை வழங்கவேண்டிய நிலை உள்ளது
என்றும் குறிப்பிட்ட காமாட்சிபுரி ஆதீனம் அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கக்
கட்டிடப்பணிகளுக்குத் தம் முழு ஆதரவை நல்குவதாகக் குறிப்பிட்டார்.
வள்ளல் பொன்
பாண்டித்துரைத்தேவர் நூற்றாண்டு நினைவுப் பெருவிழா நிகழ்ச்சித் தொடக்கவிழா
மேடையரங்கில் மதுரைத் தமிழ்ச்சங்கக் குழவினரோடு தமிழகத்துச் சைவ மடங்களின்
குருமகாசன்னிதானங்கள் வீற்றிருந்த காட்சி பூவுலகக் கயிலாயக் காட்சியாகத்
தோன்றியது. இரவின் இருளை நீக்கும் வண்ணம்
கதிரவன், தன்
செங்கதிரைப் பரப்புவதில் ஏற்படுத்தும் செவ்வானக்
கோலத்தை நினைவுறுத்தியது.
தியாகத்தின் குறியீடாகத் திகழும் காவி வண்ணம் நிறைந்து, அரங்கமே சைவத்திருக்
கோலமாகக் காட்சியளித்த தன்மை காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது. திருக்கோவிலின் உள்ளேயும், பிரகார வெளிப்பகுதியிலும்
நிலவுகின்ற அமைதியும், நிம்மதியும், இறையருளும் கலந்த பேரானந்த உணர்வு, 02.12.2011 அன்று மதுரைத் தமிழ்ச்சங்க
வளாகம் முழமையும் நிலவியது. 'அவனருளாலே அவன் தாள்
வணங்குதல்' என்பது சைவசமய உண்மை. அதன் நீட்சியாக
வள்ளல் அவர்களின் அருhளலே சைவ ஆதீனங்களின் அருளாசி கிடைக்கப்பெற்றது என்று பெருவிழாவில் பங்குபெற்ற
ஒவ்வோர் அன்பர்களும் புளகாங்கிதம் அடைந்தார்கள்.
நூற்றாண்டு நினைவுப்
பெருவிழா நிகழ்ச்சியை மங்கள விளக்கேற்றித் தொடங்கி வைப்பதற்கு ஒப்புதல் நல்கிய
தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு செல்லூர் ராஜு அவர்களும், மதுரை மாநகரத் தந்தை
வணக்கத்திற்குரிய வி.வி.இராசன்செல்லப்பா அவர்களும் பெருவிழாவில் பங்கேற்று மங்கள
விளக்கேற்றினர். அவர்களுடன்
வணக்கத்திற்குரிய மதுரை மாநகர துணை மேயர் அவர்களும், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்
குழாமுடன் கலந்து கொண்டு பெருமையும் பெருமகிழ்வும் நல்கினர். மாண்புமிகு
கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களும், மேயர் அவர்களும் தம் உரையில் வள்ளலின் பெருமையை நினைவுகூர்ந்து
வாழ்த்தினார்கள்.
உணவு இடைவேளை நேரம்
நெருங்கும்போது குழுமியிருந்த அனைவரும் வள்ளல் அவர்களின் நினைவலைகளிலே
மூழ்கியிருந்தனர். நண்பகல் உணவுவேளைக்குப்
பிறகு, மிகச்
சரியாக 2மணிக்கு
மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சி துவங்கியது.
வள்ளலின் தமிழ்ப்பணியை வெளிப்படுத்தும் வகையில் வள்ளலின் பெருமைகளைப்
புலப்படுத்துகின்ற மதுரைத் தமிழ்ச்சங்க நிறுவனர் வாழ்த்துப்பாடல், வள்ளலின் மேன்மையை
வெளிக்காட்டும் இசைப்பாடல்கள், பரதநாட்டியம், கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆகியவற்றிற்குச் செந்தமிழ்க்
கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் நடனமாடினார்கள். கலை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக வள்ளல்
அவர்களின் பிறப்பு முதலான வாழ்க்கை வரலாற்றைப் புகழ்ந்துரைக்கும் முகமாக
வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நிகழ்த்தப் பெற்றது.
அனைத்துக் கலை நிகழ்ச்சிகளும் வள்ளல் அவர்களின் சிறப்பை மையப்பொருளாக
விளங்கியதுடன் கலைநயத்துடன், அழகுணர்வுடனும் அமைந்தமையை அனைவரும் கண்டு பரவசம்
அடைந்தார்கள். செந்தமிழ்க் கல்லூரி
முதல்வர்(பொ.) முனைவர் மு.மீனா அவர்களும்
உதவிப்பேராசிரியர் (சுயநிதிப்பிரிவு) திருமதி.ஜெயந்திநாகராஜன்
அவாகளும் கலை நிகழ்ச்சிகளுக்கும் மாணவ-மாணவியருக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தனர்.
கலை நிகழ்ச்சிகளைத்
தொடர்ந்து வள்ளல் பொன். பாண்டித்துரைத்தேவரும் தமிழும் என்ற பொருண்மையில் வாழ்த்து
அரங்கம் நடைபெற்றது. வாழ்த்தரங்கத்தைத்
தமிழகத் தமிழ்ச் சங்கங்களின் கூட்;டமைப்புத் தலைவரும், செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும்
ஆகிய திருமிகு இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்.
வரவேற்புரை நல்கிய
தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.மு.நாகேஸ்வரன்
அவர்கள் செம்மொழியாம் தமிழ்மொழிக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் ஆற்றிய தமிழ்த் தொண்டினை
வெளிக்காட்டி உரைத்தார். தமிழகத்
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, உலகத்திருக்குறள் பேரவை, உலகத் திருக்குறள் மையம், இராமநாதபுரம்
தமிழ்ச்சங்கம் என்று தமிழகத்திலுள்ள சிறந்த நிலையில் செயலாற்றிவருகின்ற அனைத்துத்
தமிழ்ச்சங்கங்களும் தமிழ் அமைப்புகளும் ஒருங்கு கூடியிருந்ததைத்
தமிழ்ச்சங்கங்களின் சங்கமம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறான சிறப்பு நிகழ்விற்குக் காரணமாக
அமைந்த தமிழகத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புத்
தலைவர் திருமிகு இரா.குருசாமி
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இவரைத்தொடர்ந்து
வாழ்த்துரை வழங்கிய தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளராகிய கோவை
கூல வாணிகர் மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய வள்ளல் அவர்களின் சீரிய தொண்டினை
நினைவு கூர்ந்தார். பாலவநத்தத்து
அரண்மணையை விற்பனை செய்த வள்ளல் அவர்கள், உரூபா ஒருலட்சத்து இருபதாயிரம் எனும் மிகப்பெரிய
தொகையினை வழங்கி மதுரைத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியதைப் பெருமிதத்தடன்
எடுத்துரைத்தார்.
கோபிச்செட்டிப் பாளையம்
உலகத் திருக்குறள் பேரவையின் நிறுவனர் முனைவர்
கா.அரங்கசாமி அவர்களும், மதுரை உலகத்திருக்குறள் பேரவையின் பொதுச்செயலாளர் திருமிகு ந.மணிமொழியன் அவர்களும்
மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சீரிய பணியை வியந்து பாராட்டினார்கள். திரு. ந மணிமொழியன் அவர்கள் பெருவிழாவில் பங்கேற்ற்
பெருமகனார்களுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார்.
இராமநாதபுரம்
தமிழ்ச்சங்கத்து நிறுவனர் திரு.மு.ச.கருணாநிதி
அவர்கள் சைவ நெறியை உலகெங்கும் பரப்பியும் அண்ணல் விவேகானந்தர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பிய
பெருங்குணத்தையும், சேதுபதி பரம்பரையினர் சைவத் தொண்டு மற்றும் தமிழ்த் தொண்டாற்றிய மேன்மையையும்
எழுத்தியம்பினார். வாழ்த்துரை நல்கிய
மதுரைத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுப் பேரவை உறுப்பினர் திருமிகு எம்.பி.ஆர் மலையாண்டி (எ) அசோக் மற்றும் திருமிகு சு.வீரணசாமி அவர்களும் வள்ளல்
அவர்களின் சிறப்பை எடுத்துரைத்து, அன்னாரின் வாழ்க்கை இக்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத்
திகழ்வதைச் சுட்டிக்காட்டினார்.
பெருவிழாவிற்கு வருகைபுரிந்த சைவ ஆதீனங்களின் குருமகாசன்னி தானங்கள், தமிழகத்
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பினர் சைவநெறி ஆர்வலர்கள், அரசுத்துறை சார்ந்த பெருமக்கள்,
வள்ளல் நெறியைப்
பின்பற்றும் அன்பர்கள், தமிழ் ஆர்வலர்கள், மதுரை மாநகரப் பெருமக்கள், மதுரைத் தமிழ்ச்சங்கம் மற்றும்
செந்தமிழ்க் கல்லூரி அன்பர்கள், செய்தி தொடர்பாளர்கள் மற்றும் வருகை புரிந்த அனைவருக்கும்
மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நன்றி நவின்றனர்.
விழா நிறைவுறும் பொழுது
அனைவரின் எண்ணங்களிலும் வள்ளல் பெருமகனாரின் அருஞ்செயல்களின் மேன்மையே
இடம்பெற்றிருந்தது. வள்ளல்
பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் அருளும் ஆசியும் அனைவருக்கும்
கிடைக்கப்பெற்றதை ஒவ்வொரு பங்கேற்பாளர்களும் உணர்ந்தனர், வியந்தனர், மகிழ்ந்தனர்.
தண்ணொளி வீசும் முழநிலவு
போல வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் நூற்றாண்டு நினைவுப் பெருவிழா சிறப்புற
முழுமைபெற்று நடந்தேறியது.
சிவநெறிச்செல்வர் வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர் நூற்றாண்டு நினைவு விழா
அழைப்பிதழில் குறிப்பிடப்பெற்ற பங்கேற்பாளர்கள் அனைவரும் தவறாது வருகைபுரிந்து
சிறப்பித்தமையே வள்ளல் பெருமகனாரின் மேன்மையையும், உயர்வையும், தெய்வத்தன்மையையும்
வெளிக்காட்டுவதாக உள்ளது என்று அனைவரும் உள்ளப் புளகாங்கிதம் அடைந்து வியந்தனர்.
பாட லோசையும் கண்னொலி யோசையும்
ஆட லோசையும் மார்ப்பொலி
யோசையும்
ஓடை யானை யுறற்றொலி யோசையும்
ஊடு போயுயர் வானுல குற்றவே
என்று இராசமாபுரத்து இளவேனிற்
பருவத்தே நிகழும் கடலாடு
விழாவின்போ
எழுந்த ஓசை, பூவுலகு தாண்டி
வானுலகை அடைந்ததைப் போல
மதுரைத் தமிழ்ச்சங்கத்து
வளாகத்தில் நிகழ்ந்த பெருவிழாப்
பேரின்ப உணர்வுகள், சுவர்க்கத்தே
கோலோச்சி கொண்டிருக்கும் நம்
வள்ளல் பெருமானின் திருவடிகளைச்
சென்றடைந்திருக்கும் என்ற
உணர்வோடு
விழா இனிதே நிறைவுற்றது.
தமிழ் மக்களுக்கு
மட்டுமன்றி தமிழ்மொழிக்கும் கலங்கரை விளக்கமாய்த் திகழும் சிவநெறிச் செல்வர்
வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் புகழ் வையகம் உள்ள மட்டும் வாழ்க!
வளர்க! என்று துதிப்போமாக.
மதுரைநகர் மக்களுக்கு
மாத்தமிழ் இதயமாகும்
மக்களுக்கு உயிருமாகும்!
ஆதலினால் மாண்புடன்
மதுரைநகர் மட்டுமின்றி
மாநிலமே வாழ்ந்திட
மதுரையிலேதமிழுக்குச்
சங்கத்தை நிறுவினார்!
சதுரர்திரு
பொன்.பாண்டித்துரைத்தேவர்! நினைவு
சாலவுமே போற்றியின்றே
நூற்றாண்டில் நிற்கின்றோம்!
கதிரொளிபோல் விழாக்காணும்
இவ்வேளை வாழ்த்த
கடமையுடன் எழுந்தருளி
வந்துள்ளார்வருக!
(மதுரைத்
தமிழ்ச்சங்க விழாக்குழுவினர் கவிதை)
அனைவருக்கும் நன்றியுரித்தாகுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக