செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

சனி, 2 பிப்ரவரி, 2013

மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்


மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்
தேசிய கருத்தரங்கம்
மூன்றாம் நாள் நிகழ்வுகள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் இணைந்து செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் மூன்று நாட்கள் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) நடைபெறும் தேசியக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வுகள் 02-02-2013 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குத் தொடங்கியது. இன்றைய நிகழ்வுகளைக் கல்லூரி முதல்வரும்  (பொ), கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவைர் மு.மீனா அவர்கள் தொடங்கி வைத்தார்.
முனைவைர் மு.மீனா கல்லூரி
 முதல்வர்(பொ), கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
தேசியக் கருத்தரங்கில் பல்வேறு 
கல்லூரியில் இருந்து கலந்து கொண்ட
 ஆய்வு மாணவர்களின் ஒரு பகுதியினர்
     
    அமர்வு – 6 இல் திருவேடகம் விவேகானந்த கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.முத்தையா செந்தமிழ் இதழில் சிலப்பதிகாரத்தில் பதிகமும் காதைகளும் குறித்த ஆய்வுகள்என்னும் பொருளில் மேலாய்வுக் கட்டுரை வழங்கினார்.
  ”சிலப்பதிகாரப் பதிகம் குறித்த சிந்தனைகள்” பற்றி டி.என்.அப்பனையங்கார், நெல்லை. ந.சொக்கலிங்கம் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் வழியிலான மேலாய்வும், சிலப்பதிகாரப் பதிகம் குறித்த மாறுபட்ட சிந்தனைத்தளத்தில், பதிகம் இளங்கோவடிகள் யாத்ததா? என்ற பார்வையில் ச.சோமசுந்தர பாரதி, ச.ஒளவையார் போன்றோரின் செந்தமிழ் இதழில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள் கூறும் தரவுகள் வழியும் மேலாய்வு செய்யப்பட்டன. சிலப்பதிகாரப் பதிகம் கூறும் செய்திகளுக்கும் நூல் கூறும் செய்திகளுக்கும் வேறுபாடு காணப்படுவது குறித்த சிந்தனைகளும் விவாதிக்கப்பட்டன.
நூல் எழுந்த காலத்திற்குப் பின்னும், அரும்பத உரையாசிரியர் உரைக்கும் முன்பாக யாரோ காப்பியக் கதையையும், கருத்தையும் அறிந்தவர்கள் பதிகம் எழுதிச் சேர்த்து இருக்கலாம் என்ற கருத்தும் முன்மொழியப்பட்டது.
 தொடர்ந்து, சிலப்பதிகாரக்காதைகள் குறித்த சிந்தனைகள் பற்றி டி.என்.அப்பனையங்கார், கணேசயர், மது.ச.விமலானந்தம், நா.இராமையாப்பிள்ளை, சுப.மணிமொழியன், இரா.இளங்குமரன், ஆ.செ.சச்சிதானந்தம், மு.உலகநாதன், ஆர்.வீரபத்திரன் ஆகியோர் செந்தமிழில் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரைகள் பற்றியும் ஆராயப்பட்டன.
 தொடர்ந்து, கலந்து கொண்ட முனவர் பட்ட ஆய்வு மாணவர்களான இ.சூசை ஆரோக்கியம் (செந்தமிழ்க்கல்லூரி உயராய்வு மாணவர்), ச.காளிதாசன் (செந்தமிழ்க்கல்லூரி உயராய்வு மாணவர்), ப.சரவணபாண்டி (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), சு.முத்தையா (காந்திக்கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்) பதிகம், காதை குறித்தும் பல்வேறு வினாக்களை எழுப்பித் தங்கள் ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொண்டமை மிகவும் பாராட்டிற்குரியதாக அமைந்தது.



 தொடர்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மேனாள் தமிழியற் புலத் தலைவர் முனைவர் மு.ம்ணிவேல் அவர்கள், செந்தமிழ் இதழில் குறுந்தொகை ஆய்வுகள்குறித்து வெளிவந்துள்ள ஆய்வாளர்களின் குறுந்தொகை உரை மரபுகளையும், பொருள் கொள்ளும் உளவியல் சிந்தனைகளையும், குறுந்தொகைப் பதிப்புகளாக வெளிவந்த சூழல்களையும் தம் கருத்துரையில் எடுத்துரைத்தார்.

       இவரின் உரையினத் தொடர்ந்து, முனைவர் உ.அனார்கலி, முதல்வர், ஆர்.ஏ.பெண்கள் கல்லூரி, திருவாரூர்,செந்தமிழ் இதழில் கலித்தொகைக் கட்டுரைகள்குறித்து வெளிவந்துள்ள ஆய்வாளர்களின் சிந்தனைகளைத் தம் மேலாய்வுச் சிந்தனை மூலம் பற்றி எடுத்துரைத்தார்.
இவரின் உரையினத் தொடர்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மொழியியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் வீ.ரேணுகாதேவி அவர்கள்,செந்தமிழ் இதழில் இலக்கண ஆய்வுகள்என்னும் தலைப்பில் தமிழ் இலக்கணத்தின் சிறப்பு, இலக்கணம் குறித்துச் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள ஆராய்ச்சிகள், பற்றித் தெளிவுடன் எடுத்தமை இன்றைய நிலையில் இலக்கணக் கல்வியின் முக்கியத்துவம், வளர்ச்சி நிலை போன்ற பன்முகப் பார்வையில் ஆய்வுரை வழங்கினார்.
அமர்வு – 7  இல் செந்தமிழ்க் கல்லூரித் தமிழ் உதவிப்பேராசிரியை திருமதி.ஜெயந்திநாகராஜன் அவர்கள் செந்தமிழ் இதழில் கல்வெட்டு குறித்த ஆய்வுகள்என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார். 


 தொடர்ந்து, செந்தமிழ்க் கல்லூரித் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் செ.இராஜமோகன் அவர்கள் செந்தமிழ் இதழில் மு.ராவின் செவ்வியல் ஆய்வுகள்என்ற பொருளில் மு.ராகவையங்காரின் செந்தமிழ்ப் பணியும் செவ்வியல் பொருண்மை கொண்ட ஆய்வியல் சிந்தனைகளும் பற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து, 




அமர்வு – 8 இல்  செந்தமிழ்க் கல்லூரித் தமிழ் உதவிப்பேராசிரியை முனைவர் பெ.இந்துராணி அவர்கள்,செந்தமிழ் இதழில் புறப்பொருள் ஆய்வுகள்என்னும் தலைப்பில் செந்தமிழ் இதழில் ஆய்வறிஞர்களின் பார்வையில் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் காணலாகும் புறப்பொருள் குறித்து எழுதி வெளிவந்துள்ள ஆய்வுக்கட்டுரைகளின் நேர்த்தியும் அணுகுமுறைகளும் பற்றிக் கருத்துரை வழங்கினார்.
 அடுத்து, செந்தமிழ்க் கல்லூரித்தமிழ் உதவிப் பேராசிரியர் திரு.போ.முனியாண்டி அவர்கள் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள திருக்குறள் கட்டுரைகளில் திருவள்ளுவர் குறித்த ஆய்வுகள்என்னும் பொருளில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார். 


தொடர்ந்து, சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம்,பேராசிரியர் முனைவர் அ.மணவழகன் என்பார்,செந்தமிழ் இதழில் பதிற்றுப்பத்து ஆய்வுகள்என்னும் தலைப்பில் ஆய்வுரை வழங்கினார். பதிற்றுப்பத்து காட்டும் அரசர் வாழ்க்கை நிலை, நாட்டின் நிலை, ஊர்ப்பெயர்க்காரணங்கள், போர்முறைகள் போன்றன குறித்து வெளிவந்துள்ள செந்தமிழ் இதழ் வழிப்பெற்ற தரவுகள் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார்.
மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் தேசியக் கருத்தரங்கம்
தேசியக் கருத்தரங்க நிறைவு விழா நிகழ்வுகள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் இணைந்து செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் மூன்று நாட்கள் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) நடைபெற்ற தேசியக் கருத்தரங்கின் நிறைவு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 02-02-2013 சனிக்கிழமையன்று மாலை 3.00 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் நடைபெற்றது.


 
                   










 செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார்.இவர் தம் உரையில் நூற்றாண்டு கண்ட செந்தமிழ் இதழ் இன்றைய தமிழாய்வாளர்களுக்குப் பயன் படும் வகையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ள இத்தேசியக் கருத்தரங்கம் சிறப்புக்குரியது என்று குறிப்பிட்டார். 
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை>எம்.ஏ.>எம்ஃபில்.> அவர்கள் முன்னிலை வகித்தார். பழம்பெரும் ஆய்வறிஞர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ளன.அவைகளை மறுவாசிப்பு செய்யும் சூழலை இக்கருத்தரங்கு ஒவ்வொருவரிடமும் தூண்டி ஆய்வு செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், பதிவாளர் முனைவர் மு.முத்துவேல்  சிறப்புரையாற்றினார். இவர் தம் உரையில் நூறாண்டுகளுக்கு மேல் வெளிவந்து கொண்டிருக்கும் செந்தமிழ் இதழின் பணி குறித்துத் தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்துவதற்குச் செந்தமிழ்க் கல்லூரி ஒன்றே ஏற்புடையது என்று குறிப்பிட்டார். தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

கல்லூரி முதல்வரும்(பொ), கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் மு.மீனா அவர்கள் நன்றியுரை வழங்கினார். அப்போது, மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கின் சிறப்பும், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக முதுகலை, இளம் ஆய்வுப் பட்ட மாணவர்களும், முனைவர் பட்ட மாணவர்களும் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களின் ஆர்வமும், செந்தமிழ் இதழ்க் கருத்தாளர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரிய்து.


வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்



 தேசியக் கருத்தரங்கம்-இரண்டாம் நாள் நிகழ்வுகள்
 மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் 
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் இணைந்து செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் மூன்று நாட்கள் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) நடைபெறும் தேசியக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வுகள் 01-02-2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்குத் தொடங்கியது.
 அமர்வு – 3 இல் புதுவைப் பல்கலைக் கழக சுப்பிரமணிய பாரதி தமிழ் உயராய்வு மையப் பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி, செந்தமிழ் இதழில் பண்டைத் தமிழ் அரசர்கள் குறித்த ஆய்வுகள்என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார். 
 அடுத்து, மதுரை யாதவர் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர்(ஓய்வு),அறிஞர் இரா.கோதண்டபாணி,தம் முனைவர் பட்டப்பேற்றிற்கு 1902 முதல் 1985 வரை வெளிவந்துள்ள செந்தமிழ் இதழ்களை”செந்தமிழ் இதழின் தோற்றமும் வளர்ச்சியும்” மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் ”செந்தமிழ் இதழில் விவாதக் கட்டுரைகள்என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார்.
   இவர் தம் ஆய்வுரையில் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் 1902 ஆம் ஆண்டிலிருந்து 110 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு வரும் செந்தமிழ் என்னும் இலக்கிய இதழில் விவாதக்கட்டுரைகள் இடம் பெற்ற சூழலையும்,வாதம் வளர்ப்பது பேதம் வளர்ப்பதாகாது என்ற நிலையில் ஆரோக்கியமான மெய்ம்மையக் காணும் ஆராய்ச்சி முறையில் அறிவு சார்ந்த முறையில் தருக்க நெறியில் விவாதக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன என்று கூறினார்.மேலும்,
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் (1901) நிறுவியும் செந்தமிழ் (1902) என்னும் இலக்கியப் பொக்கிஷத்தை தமிழுலகிற்கு வழங்கியவருமான பொன்.பாண்டித்துரைத் தேவர், இத்தகைய தமிழாய்வுகள் தமிழ் மொழி, இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் என்று விரும்பினார். இரா..இராகவையங்கார் மு.இராகவையங்கார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார், சி.கணேசயர், முத்துத் தம்பிப் பிள்ளை, கோவிந்தசாமி சோழகர், மு.ரா.கந்தசாமிக் கவிராயர், மு.சாம்பசிவநாயனார், திரு.நாராயணையங்கார் போன்றோரின் ப்ன்முக விவாதக் கட்டுரைகள் செந்தமிழ் இதழில் இடம்பெற்று வலம் வந்த சிறப்புக்கள் குறித்த அரும்பெரும் செய்திகளை வழங்கினார்.


 
  அமர்வு – 4 இல், புதுவைப் பல்கலைக் கழக சுப்பிரமணிய பாரதி தமிழ் உயராய்வு மையப் பேராசிரியர் முதுமுனைனவர் சா.அறிவுடைநம்பி, செந்தமிழ் இதழில் சங்கத் தமிழ்ப் புலவர்கள் என்னும் தலைப்பில் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள தமிழ்ப் புலவர்கள் நல்லந்துவனார், அரிசில்கிழார், நக்கீரனார் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை மேலாய்வு செய்து அருமையான ஆய்வுரை வழங்கினார்.  அடுத்து, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் முனைவர் மே.து.ராசுக்குமார் அவர்கள் செந்தமிழ் இதழில் சங்கப் பொருளியல் ஆய்வுகள்என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினார். பொருளாதாரம் குறித்து செந்தமிழ் இதழில் சிந்தித்துள்ள தரவுகளைப் புலப்படுத்தினார்.
 அமர்வு – 5 இல், மதுரை காமராசர் ப்ல்கலைக் கழகத் தொலைதூரக் கல்வி மையத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் தூ.சேது பாண்டியன் அவர்கள் செந்தமிழ் இதழில் உரையாசிரியர்கள்என்னும் தலைப்பில் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய, இலக்கண உரையாசிரியர்கள் குறித்த கட்டுரைகள் பற்றி விரிவான ஆய்வுரை நிகழ்த்தினார்.
 அடுத்து,முனைவர் கோ.சங்கரம்மாள் செந்தமிழ் இதழில் சிலப்பதிகாரப் பாத்திரங்கள் என்னும் தலைப்பில் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள ஆய்வுகளின் வழி சிறந்ததொரு ஆய்வுரை வழங்கினார்.
அடுத்து, மதுரை காமராசர் பல்கலைக் கழக சைவசித்தாந்தத் துறைப் பேராசிரியை முனைவர் மு.தேவகி அவர்கள் செந்தமிழ் இதழில் மணிமேகலை என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.        
        
 
  அடுத்து, திருவையாறு அரசர் கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர்.ச.திருஞானசம்பந்தம் அவர்கள் செந்தமிழ் இதழில் புறநானூற்றுக் கட்டுரைகள் என்னும் தலைப்பில் பல்வேறு தரவுகள் செந்தமிழ் இதழில் பொதிந்து கிடக்கின்றன என்ற அரிய செய்திகளுடன் ஆய்வுரை வழங்கினார். 
 அடுத்து, செந்தமிழ் கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சு.விஜயன் செந்தமிழ் இதழில் நக்கீரர் குறித்த ஆய்வுகள் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
ஒவ்வொரு ஆய்வறிஞர்களின் உரைகளுக்குப் பின் பங்கேற்பாளர்களின் வினாக்களுக்குப் பதிலுரைக்கப் படுதலும், ஐயங்கள் தெளிவு படுத்தலும் சிறப்பிற்குரிய தன்மையாக விளங்கின.