செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

ஞாயிறு, 27 மே, 2012

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 55 ஆம் பட்டமளிப்பு விழா

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 55 ஆம் பட்டமளிப்பு விழா
  
   மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 55 ஆம் பட்டமளிப்பு விழா 27-05-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத்தேவர் அருள்  வளாகத்தில் நடைபெற்றது.. மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 55 ஆம் பட்டமளிப்பு விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள் சிறந்ததொரு வரவேற்புரை நல்கினார்.


 
        
 
 




இவ்விழாவிற்குத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத்  தலைவரும், செந்தமிழ்க்கல்லூரிச் செயலருமாகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி அவர்கள் தலைமை உரையாற்றினார். அப்போது பட்டம் பெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை மதிக்கக்கூடியவர்களாகவும், எதிர்காலத்தில் நல்ல பண்பாளராகவும் திகழ வேண்டும் எனக் கூறினார்கள்.மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் மற்றும் செந்தமிழ்க்கல்லூரியின் நோக்கங்களைக் கூறி உரையாற்றினார்.  
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு திருமிகு எஸ்.விமலா அவர்கள் பட்டமளிப்பு விழாப் பேருரையினை வழங்கினார்கள். அவர் தம் உரையில் தமிழ்மொழி, இலக்கியங்களைப் படிப்பதின் பெருமையினை எடுத்துரைத்தார்கள். நல்ல பண்புகளையும், நீதிக் கருத்துக்களையும் கொண்டுள்ள தமிழ்மொழி, இலக்கியங்கள் தமிழ்ப்பண்பாட்டினை வளர்க்கும்.இதனைக் கருத்தில் கொண்டே மேலை நாடுகளில் தமிழ்மொழி, இலக்கியங்களைக் கல்வி நிலையங்களில் கட்டாயம் ஒரு மணிநேரம் கற்றுத்தர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.  மத்திய அரசின் தேர்வாணையம் வழி எழுதும் . தேர்வுகளில் மாணவர்கள் தமிழ்மொழியினைத் தெரிவு செய்து அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று உயர்பதவிகளைத் தற்போது பெற்று வருகின்றனர். அதனால் தமிழ்மொழியின் பெருமையும் சிறப்பும் பெருகி வருகின்றது என்று கூறினார். 
 சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மன்றச் செயலாளர் திரு.சு.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் சு.வீரணசாமி அவர்கள் செந்தமிழ்க்கல்லூரியின் சேவைகளைக்கூறி வாழ்த்துரை வழங்கினார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.முத்தையா பசும்பொன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். முனைவர் க.சின்னப்பா, முதன்மையர், 55 ஆம் பட்டமளிப்பு விழாவின் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.